Thursday, March 17, 2011

மனிதன் உலகை ஆள்கிறானா இல்லை அழிக்கிறானா?

இன்று பரபரப்பாக பேசப்படும் ஒருவிடயம் ஜப்பானில் இடம்பெற்ற பூகம்பம் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்படும் சில அனர்த்தங்களும். வெளி பேச்சளவில் ஆபத்து இல்லை ஆபத்து இல்லை என்று கூறினாலும் ஒட்டுமொத்த ஆசியாவும் ஏன் அனைத்து உலக நாடுகளுமே சற்று பீதி அடைந்து தான் இருக்கிறது. காரணம், ஜப்பானின் புகுஷிமா என்னும் பகுதியில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பும் அதனைத்தொடர்ந்து ஏற்படும் கசிவுகளும். அவுஸ்திரேலியா, ஐக்கிய ராச்சியம், ஜெர்மனி மற்றும் கனடா நாடுகள் ஜப்பானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அணு கதிர்வீச்சு அபாயம் உள்ள இடத்தில் இருந்து வெளியேறும் படி கேட்டிருக்கிறது. ஆசிய பங்குசந்தைகளில் பங்குகளின் மதிப்பு குறைந்திருக்கிறது.

இவ்வளவு பரபரப்பாக பேசப்படும் அணு உலைக்கசிவு மோசமானதா? பூமியோடு பாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட முறை தான் இந்த மின் அணு உலை. இன்றைய உலகின் சவால்களாக விளங்கும் சுற்று சூழல் பாதிப்பு மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றிற்க்கு முக்கிய காரண கர்த்தா கார்பன் வாயு. உலகில் வெளியிடப்படும் கார்பன் வாயுக்களில் 40% மின் உற்பத்தியின் போது வெளியிடப்படுகிறது, அதில் நிலக்கரி முறை மின் உற்பத்தியிலேயே அதிகப்படியான கார்பன் வெளியிடப்படுகிறது. இந்த நிலக்கரிக்கு மாற்றீடாகவும் எதிர்காலத்தில் இல்லாமல் போகும் எண்ணெய் வளத்திற்க்கு பதிலாகவும் உள்ளது தான் இந்த அணு மின் உலை. ஆக மொத்தத்தில் கார்பன் வாயுவை கட்டுபடுத்தி பூமியில் ஏற்படும் விளைவுகளை தடுக்க வந்த ஒரு முறை.

மனித குலத்திற்க்கு நன்மை ஏற்படுத்த வேண்டும் என உருவாக்கிய அணு உலை முறை மக்கள் மத்தியில் பீதியை உருவாகுவது எதனால்? செயற்க்கை முறையில் அணுவை பிரித்து சக்தியை ஆக்கும் போது அனைத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள் பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள். அணுவை பிரித்து அது உச்ச வெப்ப வடிவில் சக்தி வெளியிடுதலே இந்த மின் உலையின் விசேடம். இவ்வாறு வெளியிடும் சக்தியை ஊடுகடத்தவும் மின் பிறப்பாக்கியை இயங்க செய்த பின் வெப்பத்தை கட்டுபடுத்தவும் அணு மின் உலைகளில் பாரிய நீர்த்தாங்கிகளில் தாராளமான நீர் பாவிக்கப்படுகிறது. இன்று ஜப்பானில் நடந்தது என்னவென்றால், புவி அதிர்ச்சியின் காரணமாக நீர்த்தாங்கி வெடித்ததும் சமநேரத்தில் கதிர்வீச்சு அதிகரிக்கவும் அதை கட்டுபடுத்த முடியாமல் போனதும் ஆகும். தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே அது போல இந்த அணு கதிர் வீச்சு வெளி இடங்களுக்கு பரவினால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. உடலில் உள்ள கலங்களுக்குள் ஊடுருவி ஊறு விளைவிக்கும் இந்த கதிர்கள். வெற்று கண்ணால் பார்க்கவோ உணரவோ முடியாத இக்கதிர்கள் பல காலத்திற்க்கு அழியாது நிலைத்திருக்கும் தன்மை கொண்டவை.

26 ஏப்ரல் 1986 அன்று அன்றைய சோவியத் ஒன்றியத்தில் அமைந்துள்ள செர்னோபில் (இன்று உக்கிரைன் உள்ள பகுதி) என்ற இடத்தில் ஒரு பாரிய அணு உலை விபத்து ஏற்பட்டதை பலர் மறந்திருக்க மாட்டார்கள். குளிரூட்டும் தண்ணீர் வழங்களில் ஏற்பட்ட பாதுகாப்பின்மையே இதற்க்கு காரணாமாக கருதப்படுகிறது. இதனால் 28 பேர் நேரடி பாதிப்பில் இறந்துள்ளார்கள், ஆனால் பல காலாமாக மக்கள் அணு கதிர் வீச்சின் பாதிப்பை அனுபவித்துள்ளார்கள். உடல் நலக்குறையோடு பிறந்தவர்கள் ஏராளம் கொடிய நோய்களின் தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஏராளம். உணவுகளிலும் நீரிலும் இந்த கதிர்வீச்சு பரவியிருந்த படியால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சிலகாலம் மக்களின் ஆரோக்கியம் முற்றுமுழுதாக பாதிக்க பட்டிருந்தது.



இவ்வாறு பாரிய விளைவுகளை எதிர்பாராத நேரம் ஏற்படுத்தும் மின் அணு உலை இருப்பதால் உலகிற்க்கு நன்மை ஏதாவது நடந்ததா என்றால் இன்றும் நடக்கும் நிலைமையை வைத்து இல்லை என்றே கூற வேண்டும். கார்பன் வெளியேற்றத்தை கட்டுபடுத்துவதை விட வேறு நன்மை வேண்டுமா என்று கேக்கலாம். ஆனால் மின் அணு உலையை மாற்றீடாக பாவிப்பதன் மூலம் கார்பன் வாயுவின் வெளியேற்றம் குறைந்திருக்கிறதா?

2000 ம் ஆண்டில் இருந்து 2008 ம் ஆண்டு வரையான காலப்பகுதியை உதாரணத்திற்க்கு எடுத்து கொண்டால், மக்கள் தொகை ஆறிலிருந்து 6.7 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 12 விகிதமாக உயர்ந்துவிட்டது, அதே நேரத்தில் அணு உலை மூலம் உற்பத்தி செய்யும் மின் அளவு 7 விகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் அணு மின் உலையின் மின் அதிகரிப்பால் கார்பன் வாயுவின் வெளியேற்றம் குறைந்த பாடில்லை. 23 பில்லியன் தொன்னில் இருந்து 31.5 பில்லியன் தொன்னிட்க்கு மாறியுள்ளது இந்த கார்பன் வெளியேற்றம். விகித கணக்கு படி 37% அதிகரித்துள்ளது. 12% மக்கள் தொகை அதிகரிப்பிற்க்கு 37% கார்பன் அதிகரிப்பு அதுவும் மின் அணு உலையை உற்பத்தியை 7% அதிகரித்திருந்தும்.

இவற்றை பார்த்தும் பாராமுகமாக இருக்கும் அமெரிக்கா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கண்டு கொள்ளுமா? ஏனெனில் ஒரு தனி மனிதனுக்கு ஏற்ப கார்பன் வெளியேற்றத்தை கணக்கிட்டால் அவுஸ்திரேலியா முதலிடமும் அமெரிக்கா அடுத்த இடத்தையும் பெறுகிறது. அடுத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளான சீனா மற்றும் இந்தியா தங்கள் மேம்பாட்டு நிமித்தம் மேற்கொள்ளும் செயல்களால் சூழலுக்கு கார்பன் வாயுவை அனுப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆகவே கார்பன் வாயுவை கட்டுபடுத்துதல் என்பது வெறும் கண்துடைப்பாகவே நோக்கபடுவதோடு, மின் அணு உலைகள் கார்பன் வெளியேற்றத்தை கட்டு படுத்துவதில் பங்காற்றுகிறதா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது.

அமெரிக்கா 104 மின் அணு உலைகளை தன்னகத்தே கொண்டு அதிக மின் அணு உலைகள் வரிசையில் முதல் இடத்தையும் கார்பன் வாயு வெளியேற்றத்தில் இரண்டாம் இடத்தையும் தக்கவைக்கிறது. அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், ஜெர்மனி, கனடா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மின் அணு உலைகள் மதிப்பீட்டின் படி முதல் எட்டு இடங்களில் உள்ளன. இவற்றில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கார்பன் வாயு வெளியேற்றத்தில் அதிக பங்கு வகிப்பதில் முன்னணியில் இருப்பதும் இந்த நாடுகளே. இதை தான் சொல்லுவார்களோ தொட்டிலையும் கிள்ளி பிள்ளையையும் ஆட்டுவது என்று. இதில் சீனா அடங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க, கார்பன் வாயு வெளியேற்றத்தில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவில் உருவாக்கப்படும் மொத்த மின்சாரத்தில் இரண்டு வீத மின்சாரம் மட்டுமே அணு உலையில் இருந்து பெறப்படுகிறது, ஆனாலும் மென்மேலும் மின் அணு உலைகளை நிறுவுவதால் காபர்ன் வாயு வெளியேற்றம் கட்டு படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

ஆக மொத்தத்தில் நிர்மாணிக்க பராமரிக்க மிகப்பெரிய செலவு, இயற்கையாலும் மற்றும் கவலையீனத்தாலும் ஏற்படும் விளைவுகளால் நிகழும் பாரிய அனர்த்தம் என்று பிரச்சனைகளை எதிர்நோக்கும் மின் அணு உலை சுற்றுசூழலுக்கு உகந்தது என்று சான்றிதழ் வைத்திருந்தாலும் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன என்ற ரீதியில் புவி மாசடைதல் அதிகரித்து செல்கிறதே இதற்க்கு யார் பொறுப்பு ?

அதற்க்கு இது மாற்றீடு இதற்க்கு அது மாற்றீடு என்று புதுசு புதுசாக கண்டுபிடிப்புகளும் தொழிநுட்பங்களும் வளர்ந்து கொண்டு போனாலும் குறை என்பதும் வளர்ந்து கொண்டே போகும் என்பது நிதர்சனம்.

இதைத்தான் பட்டுகோட்டை பாட்டில் எழுதினான்

அது இருந்தா இது இல்லே;

இது இருந்தா அது இல்லே.

இதுவும் அதுவும் சேர்ந்திருந்தா

அவனுக்கிங்கே இடமில்லே.

2 comments:

  1. சகோ.அகல்யன், தங்கள் மீது இறைவனின் ஸலாம் உண்டாகட்டும்.

    மிக நல்லதொரு பதிவு சகோ. எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு சரியான பதிலை தரும்படியான ஆணித்தரமான கருத்தாழமிக்க மெய்யான வாதங்கள்.

    மெய்ப்பொருளை எடுத்துக்காட்டியமைக்கு வாழ்த்துக்கள் சகோ. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!! உங்கள் ஒத்துழைப்பிற்க்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் சகோதரரே.

    ReplyDelete