Tuesday, March 23, 2010

2012

அன்பின் சுவடு இல்லா வாழ்வு
ஆபத்துக்கு உதவா நட்பு
இறைவனை வேண்டா மாந்தர்
ஈன்றவளை நினையா பிள்ளைகள்
உண்ட வீட்டிற்க்கு குந்தகம் செய்யும் துரோகிகள்
ஊராரை உறவுக்கு அழைக்கும் மடமை மாதுக்கள்
என்றும் நிலையில்லா குடும்ப பந்தம்
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் உடையோர்
ஐந்து வயது பிஞ்சையும் புணரும் காமுகன்
ஒருத்தியை மட்டும் ஏற்கமுடியாத ஒருவன்
ஓயாமல் புளுகு பேசும் பொய்யர்கள்
ஒளடதத்தில் கூட கருப்பு பணம் பார்க்கும் வியாபாரிகள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவையெல்லாம் மலிந்து காணப்படும் இந்த உலகம் 2012 ம் ஆண்டு அழியப்போகுதாம் உண்மையோ?

Sunday, March 14, 2010

பழமொழிகள்

அனைவருக்கும் வணக்கம் இன்று உங்கள் முன்னிலையில் நான் பேச எடுத்து கொண்ட விடயம்.................மன்னிக்கவும் சிறு வயது மேடை பேச்சு ஞாபகத்திற்க்கு வந்துவிட்டது அதனால் தான் இப்படி. சரி சரி இன்றைய விடயத்திற்க்கு வருவோம். மனிதனின் தேவையறிந்து காலத்துக்கு ஏற்றவாறு எம் மூதாதையர்களால் கூறப்பட்ட பழமொழிகளை இன்று சாடப்போகிறேன்.
1. கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்.
தெருவில் நாய் ஓடும் பொழுது அதை துரத்தி துரத்தி கல்லால் அடித்து வதைக்கவேண்டும் என்றா இப்பழமொழி கூறுகிறது? நிச்சயமாக இல்லை! பழமொழி என்பது சிறப்பை எடுத்து காட்ட கூறப்பட்ட வார்த்தை ஆகவே இது ஒரு மருவிய பழமொழியாக வந்துவிட்டது. இதன் உண்மையான சொல் யாதெனில், "கல்லாக கண்டால் நாயாக காணோம், நாயாக கண்டால் கல்லாக காணோம்". அதாவது ஒருவர் ஒரு கல்லினால் செய்யப்பட்ட நாய் உருவத்தை கொண்டு செல்லும் பொழுது அதை ஒரு சிற்பி கண்ணுற்றால் அவரது பார்வைக்கு அந்த கல்லின் தன்மை மாத்திரமே புலப்படும். இதையே ஒரு நாய் வளர்க்கும் பிரியர் கண்ணுற்றால் அவர் எந்த வகை நாய் மற்றும் அதன் தன்மை பற்றி நோக்குவாரே ஒழிய கல்லை பற்றி சிந்திக்க மாட்டார். ஒரு பொருளின் தன்மை அதை காணுபவரின் மனதில் ஏற்படும் எண்ணத்திலே தங்கியுள்ளது என்பதை விளக்கும் ஒரு சிறந்த முதுமொழி இது.

2 . அரசனை நம்பி புருஷனை இழக்காதே.
எம்குலப்பெண்களே கூறுங்கள், உங்களுக்கு இருப்பதைவிட ஒரு வசதியான வாழ்க்கை கிடைத்தால் நீங்கள் உங்கள் கணவனை உதறிதள்ளிவிடுவீர்களா? ஆடவர் குலமே யோசியுங்கள் நம் இனத்தில் அவ்வாறான பெண்கள் உண்டா? அதுவும் தமிழினத்தில்? அல்லது மாற்றான் மனைவியை ஏற்க்கும் அரசர் தான் இருந்தாரா? எதுவுமே இல்லை. ஒரு சில விதிவிலக்கு இருக்கலாம் ஆனால் பழமொழிகள் விதிவிலக்காக நடப்பதை வைத்து சொல்லப்பட்டதல்ல. இதுவும் ஒரு மருவிய பழமொழி தான். இதன் உண்மை வடிவம் யாதெனில் " அரசை நம்பி புருஷனை இழக்காதே" அரச மரத்தை நம்பி புருஷனை இழக்காதே என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முற்காலத்தில் அரசை மரத்தை சுற்றி வந்தால் பெண்களுக்கு குழந்தை கிட்டும் என்ற ஐதீகத்தில் பெண்கள் அரசையே சுற்றி வருவார்களாம், இதனால் புருஷனை மறந்து விடுவார்களாம். தாம்பத்திய உறவின் முக்கியத்தை உணர்த்த கூறப்பட்ட பழமொழி இது.

3 . சண்டைக்கு முந்து சபைக்கு பிந்து.
சாப்பிட்டு வயிறு வளர்த்து சண்டையை கண்டு ஓடி ஒளித்த பரம்பரையா நம் பரம்பரை? எம்மினத்தில் எத்தனை எத்தனை வீரமறவர்கள் போர் புரிந்து வெற்றி வாகை சூடியுள்ளார்கள். போர் என்றால் பயந்து ஒளிக்கும் பேடிகள் அல்லவே நாம். ஆகவே இதன் அர்த்தமும் வேறு. எமது வலது கரத்தை எடுத்து கொண்டால் சாப்பிடும் பொழுது அதை எமக்கு முன் பிடித்து சாப்பிடுகிறோம், அதையே வில்லில் நான் ஏற்றும் பொழுது பின்னால் இழுத்து நான் ஏற்றுகிறோம், ஆகவே இந்த அர்த்தத்தில் தான் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. ஒரு பயிற்ச்சியை இப்பழமொழி மூலம் கூறியுள்ளனர் நம் மூதாதையர்.

என்னும் இதுபோன்ற அல்லது இரு அர்த்தங்களுடன் சில பழமொழிகள் உள்ளன. மீண்டும் இன்னொரு பதிவில் அவற்றுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

Sunday, March 7, 2010

நாவடக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் இன்றைக்கு நான் நாவடக்கம் அல்லது அவையடக்கம் என்பதை பற்றி கொஞ்சம் அலட்டலாம் என்று யோசிக்கிறன். என்னிடம் இல்லாத ஒன்றை பற்றி கதைக்கும் போது நல்ல ஆர்வமா இருக்கும் அதுதான் இந்த முடிவு. பொதுவாக வரலாறுகளையும் சரி இலக்கியங்களையும் சரி புரட்டி பார்த்தால் தெரியும் சாதித்தவர்களும் அறிஞர்களும் அதிகம் பேசுவதில்லை என்று. வள்ளுவர் ஒளவையார் போன்ற எங்கள் தமிழுக்கு பெருமை தேடி தந்த எம்மின புலவர்களை பாருங்கள் அவர்கள் என்ன பக்கம் பக்கமாக அறிக்கை விட்டார்கள்? இல்லையே இரு வரி குரல் ஒரு வரி ஆத்திசூடி என்று ஒரு குறுகிய வார்த்தைக்குள் எவ்வளவற்றை அடக்கினார்கள். உதாரணமாக குறள் - 98
"சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் "
இரண்டே இரண்டு வரிகள் ஏழு சொற்கள் ஆனாலும் வாழ்க்கையில் உயர வாழ்க்கையை மேம்படுத்த தேவையான செயலை இந்த இரு வரியில் அடக்கி விட்டு போயிருக்கிறார் இந்த பொய்யாமொழிப்புலவர்.
அதாவது ஒருவர் முழுமனதோடும் சந்தோசத்தோடும் கூறும் இனிய சொல் என்பது அவர் வாழும் போதும் வாழ்ந்த பிற்பாடும் அவருக்கு புகழை கொடுக்கும். ஆகவே சிறுமையான செயல்கள் என கோபம் பொறமை போன்ற தீய செயல்களை குறிப்பிடுகிறார் மற்றையது மறுமை என்பது மறுபிறப்பு என்று குறிப்பிடவில்லை ஒருவரின் இறப்புக்கு பின்னான காலத்தை மறுமை என குறிப்பிடுகிறார். மற்றும் இம்மை என்பது வாழும் காலம் எனவும் கூறுகிறார்.
வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி மக்கள் மனதில் நிற்ப்பவர் யார்? என்று கேட்பார்கள், ஆனால் இவரோ இரு வரியில் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை கூறிவிட்டு சென்றுள்ளார். ஒரு மனிதனுக்கு பெயரை புகழை தேடி தருவது அவனது பொருளோ பணமோ அல்ல. சரி சரி நான் அடக்கி வாசிக்கிறன். திருப்பியும் இந்த நாவடக்கம் பற்றி வாறன். இந்த நாவடக்கம் அல்லது அவையடக்கம் என்று நான் கூறுவது பேசாமல் இருப்பதை அல்ல அளவோடு பேசுங்கள் தெளிவாக பேசுங்கள் என்பதே நாவடக்கம் என்பது எனது பார்வை. உதாரணமாக இராமாயணம் என்பது ஒரு மிகப்பெரிய காவியம் அதன் ஒரு பிரதானமான கருப்பொருள் பழி வாங்க முற்பட்டால் கோபப்பட்டால் அதன் விளைவுகள் ஒருபோதும் மகிழ்ச்சியை தேடித்தராது, மேலும் மேலும் தீமையையே உருவாக்கும். கூனி என்னும் மாந்தரை பழி வாங்கும் உணர்ச்சியால் ராமனை காட்டிற்க்கு அனுப்பினாள். இலக்குவணன் கோபப்பட்டு சூர்பனகை மூக்கையும் மார்பையும் அறுத்தான். சூர்பனகை பழிவாங்கும் பொருட்டு இராவணனை சினமேற்றினாள். கோபத்தின் உச்சியில் இராவணன் சீதையை கவர்ந்தான். இதன் விளைவுகளால் இறுதியில் பெரும்பாலானவர்கள் பெருந்துயர் எய்தினர், சந்தோசம் என்பது கானல் நீராக போனது. இவ்வாறான செயல்கள் எல்லாம் கோபத்தின் விளைவுகளை ஒரு திரையில் விளக்குகின்றன, ஆனால் இதையே ஒளவையார் "ஆறுவது சினம்" என்னும் இரு சொல்லில் கூறியிருக்கிறார், ஒளவையாரும் வால்மீகியும்/கம்பரும் ஒன்றை தான் கூறுகிறார்கள். இரண்டினது அர்த்தங்களும் ஒன்றே. இங்கே வால்மீகியோ, கம்பரோ அவையடக்கம் அற்றவர்கள் என நான் கூறவரவில்லை காலத்தின் தேவை கருதி அவர்கள் காவியத்தை அவ்வாறு படைத்தார்கள். ஆனால் ஒளவையாரோ அதை இரு வார்த்தைகளில் கூறியிருக்கிறார்.
ஒளவையாரின் இன்னொரு பேச்சும் அவரது திறனை காட்டி நிற்கிறது அதாவது திருக்குறளை பற்றி அவர் கொடுத்திருக்கும் விளக்கம் அளவிடமுடியாது. அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டிக் குறுக தரித்த குறள். ஒரு நூலிற்க்கு வேறு யாரால் இப்படி ஒரு சிறப்புரை கொடுக்க முடியும்.அணு என்று கூறவும் தான் எனக்கு இன்னொரு மேதை ஞாபகத்திற்க்கு வருகிறார், அவர் வேறு யாரும் அல்ல நவீன பெளதீகவியலின் தந்தை(father of modern physics ) என அழைக்க பட்ட விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டன் (Albert Einstein). அவர் வாழ்க்கையில் அதிகம் பேசியதில்லை தனது வேலையில் தீவிர கவனம் செலுத்தினார் அளப்பரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி இலகுவாகவும் குறைந்த சொற்களிலும் விளக்கினார். உதாரணமாக சக்திக் கோட்பாடு, ஒளித்துகல்களின் கண்டுபிடிப்புகளை மிகவும் இலகுவாக விளக்கினார். இவர்கள் தவிர கர்ம வீரர் காமராஜர் ஏழைகளின் கல்விக்கண் திறந்த மாமேதை ஒருபோதும் வீண் பேச்சு பேசியதில்லை முதலமைச்சராக இருந்தபோதும் கூட தேவை ஏற்படும் இடத்தில் மாத்திரமே கதைக்க வேண்டும் என்ற நற்பண்பு உடைய மகான் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அவரின் இந்த நாவடக்கம் ஒரு மிகப்பெரிய கரணம் என்பது மறுப்பதற்க்கில்லை. இவ்வாறு பல சாதனையாளர்களையும் மேதைகளையும் இதற்க்கு உதாரணாமாக அடுக்கி கொண்டு போகலாம் ஆனாலும் எனக்கு முதலில் நாவடக்கம் தேவை என்று நீங்கள் சொல்லுவதை என்னால் உணர முடிகிறது ஆகவே நாவடக்கம் அல்லது வீன்பேச்சின் விளைவுகள் பற்றி வள்ளுவர் கூறிய குறள்களுடன் நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லோரும் எள்ளப் படும்
பிரயோசனம் இல்லாத வார்த்தைகளை பலர் முன்னிலையில் பாவிக்கும் ஒருவனை எல்லோரும் இகழ்ந்தது பேசுவார்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
நெருப்பு சுட்ட காயம் காலம் செல்ல செல்ல மறைந்தது விடும் ஆனால் ஒருவரை தாக்கி பேசும் போது உதிரும் வார்த்தைகள் எக்காலத்திலும் விட்டகலாது.
கோபத்தினால் ஏற்படும் வார்த்தைகள் நெருப்பை விட கொடிய காயத்தை ஒருவருக்கு உருவாக்குவதால் வீண்பேச்சை குறைக்க வலியுறுத்துகிறார் வள்ளுவர் பெருமான்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
வாழ்வில் பயனுடைய சொற்களை மட்டும் பேசுங்கள் என்கிறது இக்குறள். எனது குரலும் அப்படித்தான் ஒலிக்கிறது அப்படி அநேகமானோர் நடந்தால் சந்தோசம், நான் அப்படி நடந்தால் மிகவும் சந்தோசம் சரி வேற என்ன அலட்டி முடிச்சாச்சு அப்ப நான் போட்டு வாறன்.

பணிவு

பணிவு

ஒரு மாணவனாக எனது முதல் பதிவை தொடங்குகிறேன்.......


ஒரு மாணவன் தனது இலக்கை அடைவதற்க்கு ஒரு சாதனையை நிகழ்த்த என்ன தேவை எண்டு யோசிச்சன். அது தான் இந்த பதிவு, இது எனக்குள் ஏற்ப்பட்ட ஒரு சிறிய எண்ணம் மாத்திரமே, யாருக்கும் அறிவுரையோ ஆலோசனையோ சொல்ல வெளிக்கிடவில்லை. சத்தியமா நம்புங்கோ.

எனக்கென்னவோ பணிவு தான் ஒரு மாணவனுக்கு மிக மிக முக்கியம் எண்டு நினைக்கிறன். நல்ல பண்புகள் என்று சமுதாயத்தில் வரையறுக்க பட்ட சில செயல்களின் சிகரமாக விளங்குவது பணிவு தான்.

பிளேட்டோவின் பணிவு தான் அவரை ஒரு வரலாற்று நாயகராக வலம் வர உதவியது. கிரேக்க மேதை சாக்ரடீசின் மாணவன் தான் இந்த பிளேட்டோ. சாக்கிரடீசின் படைப்புகளை வெளிக்கொணர்ந்தது இந்த பிளேட்டோ தான், ஒரு உயர்தர செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர், ஆனாலும் அந்த ஆணவம் எதுவும் இல்லாமல் மிகுந்த பணிவுடன் சாக்கிரடிசின் சிந்தனைகளை செவிமடுத்ததால் தான் அவரால் ஒரு சிறந்த மாணவனாக விளங்க முடிந்தது. இன்று உலகம் போற்றும் ஒரு மேதையாக திகழுகிறார்.

அவரது முத்தான தத்துவங்கள் சில

1. பூமிக்கு அடியிலும் மேலேயும் கொட்டிக்கிடக்கும் தங்கங்களை ஒன்றாக சேர்த்தாலும் அதை ஒரு நல்லொழுக்கத்திற்கு மாற்றீடாக தர முடியாது.

2. எந்த ஒரு மனிதனாலும் இலகுவாக கேடு விளைவிக்க முடியும், ஆனால் ஒரு நற்செயலை செய்ய எல்லோராலும் முடியாது.

3. வாழ்வில் சந்திக்கும் அனைவருடனும் அன்பாக பழகுவது என்பது கடுமையான போர்க்களத்தில் சண்டை செய்வது போன்று கடினமானது.

4. எவன் முதலில் தன்னை தானே வெற்றி கொள்கிறானோ அவனால் தான் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை குவிக்க முடியும்.

5. சிறந்த பணியாளனாக இருக்க முடியாதவன் நிச்சயமாக ஒரு நல்ல எஜமானாக வரமுடியாது.

6. ஆசை, அறிவு, உணர்ச்சி ஆகிய மூன்று அடிப்படை செயல்களில் இருந்து தான் தான் மனித நடத்தை உருவாகிறது.

7. புறக்கணித்தல் என்பது ஒரு தீய செயலை உருவாக்கும் வேர் போன்றது.

8. எமது நல்ல நடவடிக்கைகள் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும், அதுவே மற்றவர்களுக்கு ஒரு நற்செயல் செய்வதற்க்கான ஊக்கத்தை தரும்."

பணிவு பணிவு பணிவு இதை உயிர்மூச்சாக கொண்டு தேடிக்கற்றுக்கொள்ளும் மாணவர்களே சாதிக்கிறார்கள், நான் பார்த்த பழகிய கேள்விப்பட்ட பலபேர் சாதிச்சது இப்படித்தான், மீண்டும் நம்புங்கோ. ஆனால் இது மட்டும் தனித்து ஒரு மாணவன் முன்னேற காரணமாக அமையாது, இதுவும் ஒரு காரணம் என்று தான் கூறவந்தேன். சரி சரி சும்மா எதோ வம்பு அளக்க வெளிக்கிட்டு பண்பு எண்டு வாயிலை வந்துட்டு அன்பர்களே.

மேலும் ஜோ.ஷாம்சன் என்பவர் எழுதிய விழி! எழு! வெற்றிபெறு! எனும் புத்தகத்தில் இருந்து

"பதவி உயர்ந்தாலும் பணிந்து நடக்க வேண்டும்
படிப்பு உயர்ந்தாலும் பார்த்து நடக்க வேண்டும்
அறிவு உயர்ந்தாலும் அடக்கி ஆள வேண்டும்
அகிலமே உயர்ந்தாலும் அமைதி காக்க வேண்டும்"


" மாணவனே! நீ பணிவுள்ளவனாக இரு - சிகரத்தை தொடு"