Sunday, March 14, 2010

பழமொழிகள்

அனைவருக்கும் வணக்கம் இன்று உங்கள் முன்னிலையில் நான் பேச எடுத்து கொண்ட விடயம்.................மன்னிக்கவும் சிறு வயது மேடை பேச்சு ஞாபகத்திற்க்கு வந்துவிட்டது அதனால் தான் இப்படி. சரி சரி இன்றைய விடயத்திற்க்கு வருவோம். மனிதனின் தேவையறிந்து காலத்துக்கு ஏற்றவாறு எம் மூதாதையர்களால் கூறப்பட்ட பழமொழிகளை இன்று சாடப்போகிறேன்.
1. கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்.
தெருவில் நாய் ஓடும் பொழுது அதை துரத்தி துரத்தி கல்லால் அடித்து வதைக்கவேண்டும் என்றா இப்பழமொழி கூறுகிறது? நிச்சயமாக இல்லை! பழமொழி என்பது சிறப்பை எடுத்து காட்ட கூறப்பட்ட வார்த்தை ஆகவே இது ஒரு மருவிய பழமொழியாக வந்துவிட்டது. இதன் உண்மையான சொல் யாதெனில், "கல்லாக கண்டால் நாயாக காணோம், நாயாக கண்டால் கல்லாக காணோம்". அதாவது ஒருவர் ஒரு கல்லினால் செய்யப்பட்ட நாய் உருவத்தை கொண்டு செல்லும் பொழுது அதை ஒரு சிற்பி கண்ணுற்றால் அவரது பார்வைக்கு அந்த கல்லின் தன்மை மாத்திரமே புலப்படும். இதையே ஒரு நாய் வளர்க்கும் பிரியர் கண்ணுற்றால் அவர் எந்த வகை நாய் மற்றும் அதன் தன்மை பற்றி நோக்குவாரே ஒழிய கல்லை பற்றி சிந்திக்க மாட்டார். ஒரு பொருளின் தன்மை அதை காணுபவரின் மனதில் ஏற்படும் எண்ணத்திலே தங்கியுள்ளது என்பதை விளக்கும் ஒரு சிறந்த முதுமொழி இது.

2 . அரசனை நம்பி புருஷனை இழக்காதே.
எம்குலப்பெண்களே கூறுங்கள், உங்களுக்கு இருப்பதைவிட ஒரு வசதியான வாழ்க்கை கிடைத்தால் நீங்கள் உங்கள் கணவனை உதறிதள்ளிவிடுவீர்களா? ஆடவர் குலமே யோசியுங்கள் நம் இனத்தில் அவ்வாறான பெண்கள் உண்டா? அதுவும் தமிழினத்தில்? அல்லது மாற்றான் மனைவியை ஏற்க்கும் அரசர் தான் இருந்தாரா? எதுவுமே இல்லை. ஒரு சில விதிவிலக்கு இருக்கலாம் ஆனால் பழமொழிகள் விதிவிலக்காக நடப்பதை வைத்து சொல்லப்பட்டதல்ல. இதுவும் ஒரு மருவிய பழமொழி தான். இதன் உண்மை வடிவம் யாதெனில் " அரசை நம்பி புருஷனை இழக்காதே" அரச மரத்தை நம்பி புருஷனை இழக்காதே என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முற்காலத்தில் அரசை மரத்தை சுற்றி வந்தால் பெண்களுக்கு குழந்தை கிட்டும் என்ற ஐதீகத்தில் பெண்கள் அரசையே சுற்றி வருவார்களாம், இதனால் புருஷனை மறந்து விடுவார்களாம். தாம்பத்திய உறவின் முக்கியத்தை உணர்த்த கூறப்பட்ட பழமொழி இது.

3 . சண்டைக்கு முந்து சபைக்கு பிந்து.
சாப்பிட்டு வயிறு வளர்த்து சண்டையை கண்டு ஓடி ஒளித்த பரம்பரையா நம் பரம்பரை? எம்மினத்தில் எத்தனை எத்தனை வீரமறவர்கள் போர் புரிந்து வெற்றி வாகை சூடியுள்ளார்கள். போர் என்றால் பயந்து ஒளிக்கும் பேடிகள் அல்லவே நாம். ஆகவே இதன் அர்த்தமும் வேறு. எமது வலது கரத்தை எடுத்து கொண்டால் சாப்பிடும் பொழுது அதை எமக்கு முன் பிடித்து சாப்பிடுகிறோம், அதையே வில்லில் நான் ஏற்றும் பொழுது பின்னால் இழுத்து நான் ஏற்றுகிறோம், ஆகவே இந்த அர்த்தத்தில் தான் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. ஒரு பயிற்ச்சியை இப்பழமொழி மூலம் கூறியுள்ளனர் நம் மூதாதையர்.

என்னும் இதுபோன்ற அல்லது இரு அர்த்தங்களுடன் சில பழமொழிகள் உள்ளன. மீண்டும் இன்னொரு பதிவில் அவற்றுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment