Sunday, March 7, 2010

நாவடக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் இன்றைக்கு நான் நாவடக்கம் அல்லது அவையடக்கம் என்பதை பற்றி கொஞ்சம் அலட்டலாம் என்று யோசிக்கிறன். என்னிடம் இல்லாத ஒன்றை பற்றி கதைக்கும் போது நல்ல ஆர்வமா இருக்கும் அதுதான் இந்த முடிவு. பொதுவாக வரலாறுகளையும் சரி இலக்கியங்களையும் சரி புரட்டி பார்த்தால் தெரியும் சாதித்தவர்களும் அறிஞர்களும் அதிகம் பேசுவதில்லை என்று. வள்ளுவர் ஒளவையார் போன்ற எங்கள் தமிழுக்கு பெருமை தேடி தந்த எம்மின புலவர்களை பாருங்கள் அவர்கள் என்ன பக்கம் பக்கமாக அறிக்கை விட்டார்கள்? இல்லையே இரு வரி குரல் ஒரு வரி ஆத்திசூடி என்று ஒரு குறுகிய வார்த்தைக்குள் எவ்வளவற்றை அடக்கினார்கள். உதாரணமாக குறள் - 98
"சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் "
இரண்டே இரண்டு வரிகள் ஏழு சொற்கள் ஆனாலும் வாழ்க்கையில் உயர வாழ்க்கையை மேம்படுத்த தேவையான செயலை இந்த இரு வரியில் அடக்கி விட்டு போயிருக்கிறார் இந்த பொய்யாமொழிப்புலவர்.
அதாவது ஒருவர் முழுமனதோடும் சந்தோசத்தோடும் கூறும் இனிய சொல் என்பது அவர் வாழும் போதும் வாழ்ந்த பிற்பாடும் அவருக்கு புகழை கொடுக்கும். ஆகவே சிறுமையான செயல்கள் என கோபம் பொறமை போன்ற தீய செயல்களை குறிப்பிடுகிறார் மற்றையது மறுமை என்பது மறுபிறப்பு என்று குறிப்பிடவில்லை ஒருவரின் இறப்புக்கு பின்னான காலத்தை மறுமை என குறிப்பிடுகிறார். மற்றும் இம்மை என்பது வாழும் காலம் எனவும் கூறுகிறார்.
வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி மக்கள் மனதில் நிற்ப்பவர் யார்? என்று கேட்பார்கள், ஆனால் இவரோ இரு வரியில் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை கூறிவிட்டு சென்றுள்ளார். ஒரு மனிதனுக்கு பெயரை புகழை தேடி தருவது அவனது பொருளோ பணமோ அல்ல. சரி சரி நான் அடக்கி வாசிக்கிறன். திருப்பியும் இந்த நாவடக்கம் பற்றி வாறன். இந்த நாவடக்கம் அல்லது அவையடக்கம் என்று நான் கூறுவது பேசாமல் இருப்பதை அல்ல அளவோடு பேசுங்கள் தெளிவாக பேசுங்கள் என்பதே நாவடக்கம் என்பது எனது பார்வை. உதாரணமாக இராமாயணம் என்பது ஒரு மிகப்பெரிய காவியம் அதன் ஒரு பிரதானமான கருப்பொருள் பழி வாங்க முற்பட்டால் கோபப்பட்டால் அதன் விளைவுகள் ஒருபோதும் மகிழ்ச்சியை தேடித்தராது, மேலும் மேலும் தீமையையே உருவாக்கும். கூனி என்னும் மாந்தரை பழி வாங்கும் உணர்ச்சியால் ராமனை காட்டிற்க்கு அனுப்பினாள். இலக்குவணன் கோபப்பட்டு சூர்பனகை மூக்கையும் மார்பையும் அறுத்தான். சூர்பனகை பழிவாங்கும் பொருட்டு இராவணனை சினமேற்றினாள். கோபத்தின் உச்சியில் இராவணன் சீதையை கவர்ந்தான். இதன் விளைவுகளால் இறுதியில் பெரும்பாலானவர்கள் பெருந்துயர் எய்தினர், சந்தோசம் என்பது கானல் நீராக போனது. இவ்வாறான செயல்கள் எல்லாம் கோபத்தின் விளைவுகளை ஒரு திரையில் விளக்குகின்றன, ஆனால் இதையே ஒளவையார் "ஆறுவது சினம்" என்னும் இரு சொல்லில் கூறியிருக்கிறார், ஒளவையாரும் வால்மீகியும்/கம்பரும் ஒன்றை தான் கூறுகிறார்கள். இரண்டினது அர்த்தங்களும் ஒன்றே. இங்கே வால்மீகியோ, கம்பரோ அவையடக்கம் அற்றவர்கள் என நான் கூறவரவில்லை காலத்தின் தேவை கருதி அவர்கள் காவியத்தை அவ்வாறு படைத்தார்கள். ஆனால் ஒளவையாரோ அதை இரு வார்த்தைகளில் கூறியிருக்கிறார்.
ஒளவையாரின் இன்னொரு பேச்சும் அவரது திறனை காட்டி நிற்கிறது அதாவது திருக்குறளை பற்றி அவர் கொடுத்திருக்கும் விளக்கம் அளவிடமுடியாது. அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டிக் குறுக தரித்த குறள். ஒரு நூலிற்க்கு வேறு யாரால் இப்படி ஒரு சிறப்புரை கொடுக்க முடியும்.அணு என்று கூறவும் தான் எனக்கு இன்னொரு மேதை ஞாபகத்திற்க்கு வருகிறார், அவர் வேறு யாரும் அல்ல நவீன பெளதீகவியலின் தந்தை(father of modern physics ) என அழைக்க பட்ட விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டன் (Albert Einstein). அவர் வாழ்க்கையில் அதிகம் பேசியதில்லை தனது வேலையில் தீவிர கவனம் செலுத்தினார் அளப்பரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி இலகுவாகவும் குறைந்த சொற்களிலும் விளக்கினார். உதாரணமாக சக்திக் கோட்பாடு, ஒளித்துகல்களின் கண்டுபிடிப்புகளை மிகவும் இலகுவாக விளக்கினார். இவர்கள் தவிர கர்ம வீரர் காமராஜர் ஏழைகளின் கல்விக்கண் திறந்த மாமேதை ஒருபோதும் வீண் பேச்சு பேசியதில்லை முதலமைச்சராக இருந்தபோதும் கூட தேவை ஏற்படும் இடத்தில் மாத்திரமே கதைக்க வேண்டும் என்ற நற்பண்பு உடைய மகான் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அவரின் இந்த நாவடக்கம் ஒரு மிகப்பெரிய கரணம் என்பது மறுப்பதற்க்கில்லை. இவ்வாறு பல சாதனையாளர்களையும் மேதைகளையும் இதற்க்கு உதாரணாமாக அடுக்கி கொண்டு போகலாம் ஆனாலும் எனக்கு முதலில் நாவடக்கம் தேவை என்று நீங்கள் சொல்லுவதை என்னால் உணர முடிகிறது ஆகவே நாவடக்கம் அல்லது வீன்பேச்சின் விளைவுகள் பற்றி வள்ளுவர் கூறிய குறள்களுடன் நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லோரும் எள்ளப் படும்
பிரயோசனம் இல்லாத வார்த்தைகளை பலர் முன்னிலையில் பாவிக்கும் ஒருவனை எல்லோரும் இகழ்ந்தது பேசுவார்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
நெருப்பு சுட்ட காயம் காலம் செல்ல செல்ல மறைந்தது விடும் ஆனால் ஒருவரை தாக்கி பேசும் போது உதிரும் வார்த்தைகள் எக்காலத்திலும் விட்டகலாது.
கோபத்தினால் ஏற்படும் வார்த்தைகள் நெருப்பை விட கொடிய காயத்தை ஒருவருக்கு உருவாக்குவதால் வீண்பேச்சை குறைக்க வலியுறுத்துகிறார் வள்ளுவர் பெருமான்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
வாழ்வில் பயனுடைய சொற்களை மட்டும் பேசுங்கள் என்கிறது இக்குறள். எனது குரலும் அப்படித்தான் ஒலிக்கிறது அப்படி அநேகமானோர் நடந்தால் சந்தோசம், நான் அப்படி நடந்தால் மிகவும் சந்தோசம் சரி வேற என்ன அலட்டி முடிச்சாச்சு அப்ப நான் போட்டு வாறன்.

No comments:

Post a Comment